உளுந்தூர்பேட்டை இளம்பெண் மரண வழக்கு காதலன் கைது.. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 May 2026

உளுந்தூர்பேட்டை இளம்பெண் மரண வழக்கு காதலன் கைது..

 


கர்ப்பிணி இளம்பெண்ணை சாதி காரணம் காட்டி திருமணம் மறுத்ததாக குற்றச்சாட்டு; வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்கு


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பா.கிள்ளனூர் கிராமத்தில் விவசாயக் கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளம்பெண் அபிஷா மரண வழக்கில், அவரை காதலித்து வந்த கோகுல்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பா.கிள்ளனூர் தலித் பகுதியைச் சேர்ந்த வீரமணியின் இளைய மகள் அபிஷா (19), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், கூவாடு கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் (21) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.


கடந்த 28ஆம் தேதி கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அபிஷா, அதே கிராமத்தில் உள்ள அஷ்ரப் அலி என்பவரின் விவசாயக் கிணற்றில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த களமருதூர் போலீசார் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


அபிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி, காதலன் கோகுல்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என உறவினர்களுடன் விசிக, கம்யூனிஸ்ட், புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உடலை பெற்றுக்கொள்ள மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.


இதற்கிடையில், அபிஷா உயிரிழந்த செய்தியை அறிந்த கோகுல்ராஜ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


இதையடுத்து கோகுல்ராஜ் மற்றும் அவரது தாய் தமிழ்ச்செல்வி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிகிச்சை பெற்று வந்த கோகுல்ராஜை காவல்துறை கண்காணிப்பில் வைத்திருந்தது.


பின்னர் குணமடைந்த கோகுல்ராஜிடம் நடத்திய விசாரணையில், கூத்தாண்டவர் திருவிழாவில் அபிஷா தாம் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதை தெரிவித்துத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு கோகுல்ராஜ் சாதியை காரணம் காட்டி மறுத்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


ஆத்திரத்தில் அபிஷாவின் செல்போனை கோகுல்ராஜ் உடைத்ததாகவும், பின்னர் அவரை சமாதானப்படுத்தி உளுந்தூர்பேட்டையில் டீ குடித்துவிட்டு அதிகாலை 4 மணியளவில் பா.கிள்ளனூரில் இறக்கிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.


வீட்டிற்கு செல்லாமல் பெரியம்மா வீட்டில் தங்கியிருந்த அபிஷா, காலை தாய் எழுப்பியபோது உடைந்த செல்போனை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், கர்ப்பம் குறித்த தகவல் வீட்டாருக்கு தெரிந்துவிடுமோ என்ற மனஉளைச்சலில் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறினர்.


இதனைத் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பில் இருந்த கோகுல்ராஜை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.


இச்சம்பவம் காரணமாக பா.கிள்ளனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.



D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad